Published Date: April 20, 2023
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை கணினி வழியில் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு புதிய உயர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
உயர் தொழில்நுட்பம்:
தமிழக சட்டசபையில் மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட புதிய அறிவிப்புக்கள் வருமாறு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தப்படும் தேர்வுகளில் ஓராண்டுக்கு 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெவ்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதி வருகின்றனர். இத்தேர்வுகள் பல்வேறு தரத்திலான பணிநிலைகளுக்கு ஏற்ப நடத்தப்படுகின்றன. எனவே இவற்றை கையாளும் முறைகளும் செயல்திட்டங்களும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கான பணியிலும் அதன் பின் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள், தெரிவுகள் போன்ற நடவடிக்கைகளும் பெரிய அளவிலான கட்டமைப்புகளையும், பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது உள்ளது. தற்போதுள்ள நடைமுறைகளில் காலதாமதம் மற்றும் பெரும் கட்டமைப்புகளையும் சார்ந்து உள்ள நிலையை தவிர்த்து தெரிவுப்பணிகளை தெளிவாகவும், முறையாகவும் மேற்கொள்ளவும், தேர்வுகளுக்கு பிந்தைய நடவடிக்கைகளை துரிதமாகவும், வெளிப்படையாகவும் கையாள்வதற்கும் புதிய உயர் தொழில்நுட்பம் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்படும்.
கணினி வழித் தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் ஒரே தேர்வுக்கு 25 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் பணி நாடுநர்கள் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
இவ்வாறு எழுதப்படும் தேர்வுகளில் திருத்தப்படும் பாடவாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கையும் பல மடங்காகும். இது பெருமளவு பணியாளர்கள் மற்றும் கால நேரம் தேவைப்படும் நடவடிக்கையாகும். அகில இந்திய அளவில் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளில் பின்பற்றப்படும் கொள்குறி வகை ( அப்ஜெக்டில் டைப்) தேர்வுகள் பற்றிய வழிமுறைகளை ஆராய்ந்து அனுபவங்களின் அடிப்படையில் காலதாமதத்தை தவிர்த்து வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வாணையத்தால் கணினி வழி தேர்வு முறையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
இவ்வாறு அவர் அறிவிப்பை வெளியிட்டார்.
Media: DAILYTHANTHI